சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த தம்பதி, தங்களது குழந்தையுடன் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தனர். ரயில் வர தாமதமானதால், தம்பதிகள் இருவரும் அசந்து தூங்கியுள்ளனர். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் பிளாட்பாரத்தில் தனியாக விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்று வயது குழந்தையை கடத்தி சென்றார். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது குழந்தையை காணததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவந்த நிலையில், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் அந்த நபர் குழந்தையுடன் நிற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.