தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள், ஜிஎஸ்டி சாலையை எளிதாக கடக்கும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு ரூ.9 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளுக்கு பயணிகள் சென்று வர இந்த நடைமேம்பாலம் உதவியாக இருந்தது. இப்பாலத்தை ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி ரூ.10 கோடி மதிப்பில், ரயில் நிலையம் வரை நடைமேம்பாலம் நீட்டிக்கப்பட்டது. கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய பாலத்தை தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.