சென்னை: மிக்ஜாம் புயல் மழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கின. குறிப்பாகச் சென்னை பெருநகரமே வெள்ளத்தால் தத்தளித்தது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களது உடைமைகளை இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நிவாரணப் பொருட்களையும் வழங்கி வந்தது. தற்போது சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றது. இந்நிலையில், வெள்ளத்தில் தங்களது பள்ளி சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் இன்று (டிச.12) முதல் முகாம்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புத்தகங்களை இழந்த சுமார் 20,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தங்களை பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.