சென்னை:அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தை தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மூலம் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் மாறி மாறி நீதிமன்றத்தை நாடினர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் இருக்கும் போது, அவசரமாக தேர்தல் நடத்த வேண்டியதில்லை. அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து ஈபிஎஸ் தலைமையிலான அணியினர், அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம், மின்கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தி தங்களது வலிமையை காண்பித்துவருகின்றனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் தலைமையில், அதிமுகவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
முக்கியமாக இந்த நிகழ்வில், ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், ஓபிஎஸ் உடன் இணைந்துள்ளார். அப்போது பேசிய ஓபிஎஸ், "எம்ஜிஆர் மாவட்ட செயலாளர்களை வைத்துக்கொண்டு அதிமுகவை ஆரம்பித்தார். அப்போது அதிமுகவின் தலைமையை அடிமட்ட தொண்டன்தான் தேர்வு செய்வார்கள் என்ற விதியை எம்ஜிஆர் வகுத்தார். அந்த விதிகளை மறந்துவிட்டு சர்வாதிகாரமாக கட்சியை ஈபிஎஸ் அடைய நினைக்கிறார்.
இப்போது நடப்பதும் தர்மயுத்தம்தான். எம்ஜிஆர் கொண்டு வந்த விதிகளை மாற்றி பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து தலைமைக்கு வர நினைக்கிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதியாக 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும். தலைமை கழக நிர்வாகிகளாக 5 ஆண்டுகள் இருக்க வேண்டுமாம். அப்படி இருக்கையில் அடிமட்ட தொண்டன் எப்படி தலைமை பதவிக்கு வர முடியும்..? ஜுன் 23 மற்றும் ஜூலை 11ஆம் தேதிகளில் நடைபெற்ற பொதுக்குழுவில் நடந்த அனைத்தும் உங்களுக்குத் தெரியும். ஜனநாயக நாட்டில் இவ்வளவு கீழ்த்தனமாக பொதுக்குழு நடந்ததில்லை" என்றார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ் ஊரில் கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்; கண்டுகொள்ளாத காவல்துறை