மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது - சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 15 மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைப்பதால், மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் கனிம வளமே இல்லாமல் போய் விடும் எனவும், குடிதண்ணீருக்கு வருங்கால தலைமுறைகள் திண்டாட வேண்டியது வரும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
முன்ஜாமீன் நிபந்தனையாக 25 ஆயிரம் ரூபாய் விதித்தாலும், அதை செலுத்த இந்த கும்பல் தயங்குவதில்லை எனவும், முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த நீதிபதி, இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது எனவும், சில காலம் சிறையில் இருந்தால்தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பயம் வரும் எனவும், கடத்தல் குறைந்து இயற்கை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர், மணல் கடத்தல் வழக்கில் சிக்கி முன்ஜாமீன் கோரிய மனுக்களை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.