சென்னை:இயக்குனர் நெல்சன் தனியார் தொலைக்காட்சியில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிவிட்டு முதல் முறையாக சிம்பு நடிப்பில் 2010ம் ஆண்டு வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் அப்படம் திடீரென கைவிடப்பட்டது. இதனால் மிகவும் மன வேதனையில் இருந்த அவர் துவண்டு போகாமல் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா என்ற படத்தை நயன்தாராவை வைத்து இயக்கினார்.
நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த அந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டார்க் காமெடி என்ற பாணியில் எடுக்கப்பட்ட அப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதால் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார்.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தின் டார்க் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் மெரும் வரவேற்பைப் பெற்றது. கலகலவென பேசிக்கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயனை ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசும் கதாபாத்திரமாக நடிக்க வைத்திருந்தார். அப்படமும் அவருக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்தது.
கரோனா காலகட்டத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளை நோக்கி வரவழைத்தது. இப்படத்தின் வெற்றி நெல்சனுக்கு விஜயயை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. அப்படத்திற்கு பீஸ்ட் என தலைப்பிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை வலுப்படுத்திருந்தார்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பு உடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அதுமட்டுமின்றி பீஸ்ட் பட படுதோல்வியினால் நெல்சனை கிண்டல் செய்யாத ஆள் இல்லை. திரைக்கதை சரியாக அமையாததால் படமும் படுதோல்வி அடைந்தது. இதற்கு திரைக்கதை சரியாக அமையாததே படத்தோல்விக்கான காரணம் என படக்குழு அறிவித்தது.