சென்னை:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக நடந்து கொண்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார்கள் எழுந்தன. இவர் சிறிய குற்றங்களை செய்பவர்களையும் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று பற்களைப் பிடுங்கி தண்டிப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் வெங்கடேசன் என்பவரை, கொலை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்டப் புகாரில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் பல்வீர் சிங் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை என்ற பெயரில் கிடுக்கிகளை கொண்டு பற்களை பிடுங்கியதாகவும், அவர்களது விதைப்பைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடந்ததாக கூறியும், அவரது விதைப்பையை நசுக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் கைதிகளின் வாயில் லத்தியால் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.