சென்னை:உலகம் முழுவதும் வளரும் நாடுகள், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அவசரம் காட்டி வருகின்றன. இதில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவும் விதிவிலக்கல்ல. நெடுஞ்சாலைகள், நகர்ப்புற ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள் ஆகிய கட்டுமானத் திட்டங்களை திட்டமிட்டுச் செயல்படுத்துவது வழக்கமான ஒன்றுதான்.
ஆழமான இந்தப் பகுப்பாய்வில், நாட்டின் உள்கட்டமைப்பு முன்னணித் திட்டங்களை செயல்படுத்தும்போது ஆரம்ப கட்டங்களில் எதிர்கொள்ளும் சவால்கள், இந்தத் திட்டங்களை சுமூகமாக நிர்வகிக்க வழிவகுக்கும் செயல்முறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சென்னை ஐஐடி ஆய்வு நடத்தியுள்ளது. இதில், இந்திய வாடிக்கையாளர்கள் பணியமர்த்திய பகுதி நேர அயலகப் பணியாளர்கள்தான் பெரும்பாலான சிக்கல்களுக்குத் தீர்வு காண காரணமாக இருப்பதும், திட்டங்களைப் பொறுத்தவரை இந்தப் பணியாளர்கள் கணக்கில் கொள்ளப்படாத நபர்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மெகா திட்டங்களை எவ்வாறு சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்பதற்கான முக்கிய நுண்ணறிவை இந்த ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளது. டெல்லியில் 2 மெட்ரோ ரயில் மெகா திட்டங்கள் குறித்து அனுபவ ரீதியான தரவுகளை சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் ஆய்வுசெய்தார்.
இதில், திட்டங்களில் அங்கம் வகிக்கும் வெவ்வேறு நிறுவனங்களின் பணி நடைமுறைகள் தொடர்பான கருத்து மோதல்களால் ஏற்படும் முட்டுக்கட்டைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற, மதிப்பாய்வு செய்யப்பட்ட "International Journal of Project Management" இதழில் (https://doi.org/10.1016/j.ijproman.2022.04.007) வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.
இந்த ஆய்வுக் கட்டுரையின்படி, நெடுஞ்சாலைகள், நகர்ப்புற ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னணி அல்லது புதிய நிறுவனங்கள் செயல்படுத்தும்போது, அப்பணிகள் சுமூகமாக நடைபெற இந்திய பொதுத்துறை வாடிக்கையாளர்கள் பணியமர்த்தும், பகுதி நேர அயலகப் பணியாளர்கள் முக்கியப் பங்காற்றியிருப்பது தெரியவந்துள்ளது.