ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையிலும் ஜெயிக்க ஒரு ரோல் மாடல் இருப்பர். அப்படி, எந்தவொரு துறையிலும் கால்பதிக்கும் இளைஞர்கள் பலருக்கும் மிகப்பெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார், தொலைக்காட்சித் தொகுப்பாளர் கோபிநாத்.
குறிப்பாக, 90’ஸ் கிட்ஸ்களின் படிப்பு, காதல், பணி, பொருளாதாரத்தேடல், லட்சியம், கடும் உழைப்பு ஆகிய வாழ்வியல் பிரச்னைகளில் எங்கோ ஒரு நாள் கேட்ட கோபிநாத்தின் குரல் நிச்சயம் மனதிற்குள் சன்னமாய் ஒலித்துக்கொண்டிருக்கும். அது அவர்களின் வாழ்வை தெம்புடன் நகர்த்த சிறு மன விளக்கை ஏற்றியிருக்கும்.
அந்த அளவுக்கு கிட்டத்தட்ட ஒரு 15 ஆண்டுகாலமாக காட்சி ஊடகத்தையும் சரி, பண்பலை ஊடகத்தையும் சரி தன் சரியான மொழி ஆளுமையால் கட்டி, அதில் ராஜாவாகத் திகழ்கிறார், தொகுப்பாளர் கோபிநாத்.
ஆனால், அவர் இந்த இடத்தை மிக எளிதில் அடைந்துவிடவில்லை. பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
சாதாரணமாக வெற்றி கிடைக்காது
அடிப்படை வசதிகளுக்குப் பெரிதும் போராடவேண்டிய, மிகவும் பின் தங்கிய மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தின், அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த கோபிநாத் பணி நிமித்தமாக சென்னையை நோக்கி நகர்ந்தார்.
ஆரம்பத்தில் தான் பிடித்த பிபிஏ படிப்பிற்கு ஏற்ற உத்யோகம் கிடைக்காத நிலையில், மார்க்கெட்டிங் துறையில் பணிக்கு சேர்ந்த கோபிநாத் கிடைத்த வேலையை குறைவாக எண்ணாமல், தெருத்தெருவாக வீடு வீடாக சென்று புடவை விற்றிருக்கிறார்.
இருப்பினும், கோபிநாத்திற்குள் இருக்கும் ஊடக கனவு மட்டும் அவரைத் தூங்கவிடவில்லை. அவரைத் துரத்திக்கொண்டிருந்தது.
அதன் பலனாக, பல்வேறு ஊடகங்களின் வாசல்கள் திறந்தன. அதைத் தொடர்ந்து ராஜ் டிவி, ஜெயா டிவி, என்டிடிவி உள்ளிட்டப் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய பின், விஜய் டிவியில் இணைந்தார்.