சென்னை: இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 164ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். ஓராண்டு காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து துணை வேந்தர் எடுத்துரைத்தார்.
இதற்கு நானோ, துணை வேந்தரோ காரணமல்ல. கல்வியும், சுகாதாரமும் எனது இரு கண்கள் என எங்களை வழிநடத்தும் முதலமைச்சர் தான் காரணம். பல அறிஞர்கள், குடியரசுத்தலைவர் இந்த பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர் என்பதே பெருமையான ஒன்று தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்தான். பல்வேறு புகழ்பெற்ற நபர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி.