தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்திய மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீப காலமாக மருத்துவ படிப்பில் சேர பல முறைகேடுகள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா மோசடி செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டினர்.
- ஆள்மாறாட்டம் மூலமாக எத்தனை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்?
- நீட் தேர்வு எழுதும்போது மாணவர்கள் காண்பிக்கும் அடையாள அட்டையும் அதே மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது காண்பிக்கும் அடையாள அட்டையும் ஆய்வு செய்யப்படுகிறதா?
- தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா மீதான வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது?
- உதித் சூர்யா மோசடி செய்தது தெரிந்த பிறகும் கல்லூரி முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?
- நீட் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்றுகிறார்களா?
- இரட்டை வசிப்பிட சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நாளை பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.