சென்னை:நீட் தேர்வு தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், சிக்கல்களையும் பற்றிய பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிடம், நீட் தேர்வு பாதிப்பு குறித்த கருத்துகளை தெரிவிக்க இன்றே கடைசிநாள் என்ற சூழலில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவரணி செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எழிலரசனும் நீட் தேர்வு பாதிப்பு குறித்த கருத்துகளை இந்தக்குழுவிடம் அளித்துள்ளனர்.
நீட்டால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
அவர்கள் குழுவிடம் அளித்த அறிக்கையில், "தமிழ்நாட்டில், அனிதாவில் தொடங்கி பிரதீபா, ஏஞ்சலின் ஸ்ருதி, சுபஸ்ரீ (சென்னை), ரிதுஸ்ரீ, ஜோதிஸ்ரீ துர்கா, வைஸ்யா, ஆதித்யா, விக்னேஷ், சுபஸ்ரீ (திருச்சி), மோதிலால், கீர்த்தனா, தனலெட்சுமி ஆகிய 13 மாணவர்கள் நீட் தேர்வால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
பிள்ளைகளை இழந்த அத்தனை பெற்றோரும், ‘நீட் தேர்வு அரசுப் பள்ளி பாடத்திட்டத்துக்கு எதிராக உள்ளதால், பள்ளி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும், நீட் தேர்வின் வினாத்தாள்கள் மாணவர்களுக்குப் பயத்தையும், எதிர்மறை சிந்தனையையும் விதைத்து அவர்களைத் தற்கொலை வரை அழைத்துச் செல்கின்றன. எனவே, நீட் வேண்டாம்’ என்று எங்களிடம் கண்ணீர் மல்க வேண்டிக்கேட்டுக்கொண்டனர்.
நீட் வேண்டாம்- தன்னெழுச்சி முழக்கம்
தமிழ்நாட்டின் முதுநிலை மற்றும் உயர் மருத்துவப் பிரிவுகளில் 50 விழுக்காடு இடங்களையும் இளநிலையில் 15 விழுக்காடு இடங்களையும் வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசு பறித்துக்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
அதில் அனைத்து அரசு மருத்தவக் கல்லூரிகளிலும் முதுநிலை மற்றும் உயர் மருத்துவப் பிரிவுகள் அதிகளவில் உள்ளன. இவ்விடங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கும் சூழலில், எஞ்சிய இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதையும் ஒன்றிய அரசின் கைகளில் தருவதன் மூலம் தமிழ்நாட்டின் மருத்துவத் துறை பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் அபாயமும் உள்ளது.