செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மேலும், கூட்டணி கட்சித் தலைவர்கள் வேல்முருகன், வைகோ, கே.எஸ். அழகிரி, தொல் திருமாவளவன், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சார்பாகவும் தலைவர்கள் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளோம்.
முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தி, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாகத் திகழ்வதற்கு அவர் பாடுபட்டு வருகிறார்.
விவசாயிகளுக்கு சலுகைத் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவையை நிறைவேற்றி இருக்கிறார். பெண்களுக்கான இலவசப் பேருந்து சேவை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். இப்படியாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 85 விழுக்காடு வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகளை ஒருங்கிணைக்கும், பங்கு அவருக்கு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற அணிகள் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை அவர் வளர்த்து வருகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தியை பிரகடனப்படுத்தியவர்” என்றார்.
தொடர்ந்து கேஸ் விலை உயர்வு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், “சமையல் எரிவாயு 550 ரூபாய் இருக்கும்போது 50 விழுக்காடு மானியத்தை காங்கிரஸ் ஆட்சியில் வழங்கியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது உலக அளவில் கச்சா எண்ணெய் 120 டாலர் இருக்கும்போது, பெட்ரோல் 67 ரூபாய்க்கும், டீசல் 57 ரூபாய்க்கும் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டது.
ஆனால், மோடி அரசாங்கம், கடந்த 8 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் குறைந்திருந்தாலும், அதனை மக்களுக்கு கொடுக்காமல், 18 லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை சம்பாதித்து இருக்கிறது. இது மிகப்பெரிய பொருளாதார குற்றம். இதனை பிரதமர் மோடி செய்திருக்கிறார். இது மக்களை பாதிக்கின்ற ஒன்று. குறிப்பாக தாய்மார்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை புறக்கணிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திமுகவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுக்கிறாரா?