சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 99வது அமைப்பு தினம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள் விழாவையொட்டி தியாகராயநகர், செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து கட்சியின் அமைப்பு தினத்தையொட்டி ‘ஜனசக்தி’ வார இதழ் ஆசிரியர் டி.எம்.மூர்த்தி வெளியிட்ட சிறப்பு இதழ்களை டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் மு.கண்ணகி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாத நாட்காட்டியை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட, உழைக்கும் பெண்கள் அமைப்பின் (ஏஐடியூசி) தேசிய ஒருங்கிணைப்பாளர் வகிதா நிஜாம் பெற்றுக் கொண்டார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு வழங்க 200 போர்வைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, "அண்மையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் புயல், மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி மீட்கப்பட்டதையும் குறிப்பிட்டு, தனது வேதனையைத் தெரிவித்தார்.
மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிவாரண நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டார். மத்திய பாஜக அரசு பேரிடர் கால நிவாரண நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது சரியல்ல. புயல், மழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவித்து, தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.21 ஆயிரம் கோடி நிதியை முழுமையாக வழங்க வேண்டும்.
முதலமைச்சர் வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், “99வது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு கால வாழ வாழ்த்துகிறேன். ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருந்து என்றும் வழி நடத்திட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
ஜி.கே.வாசன்: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவுக்கு 98வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பவர்.
தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, தமிழ்நாடு முன்னேற அயராது பாடுபடுபவர். பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமையைப் பின்பற்றுபவர். ஐயா நல்லக்கண்ணு நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்” என ஜி.கே.வாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: “எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, பொதுச் செயலாளர் வன்னியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகர், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், விவசாயிகள் இயக்கத் தலைவர்கள், ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கைதிகள் வீடியோ காலில் பேசலாம் - கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகம் அறிவிப்பு..!