ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் பொன்வண்ணன், இயக்குநர் வசந்தபாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'எந்த போராட்டமும் வெற்றி பெறக்கூடாது என்பதே அரசின் நோக்கம்' - நல்லகண்ணு
சென்னை: 'எந்த போராட்டமுமே வெற்றிபெறக் கூடாது என்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அரசியலை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்' என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசுகையில், 'லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மிக கண்ணியமாக போராட்டம் நடத்தி உலக அரங்கில் தமிழ்நாட்டை தலைநிமிர செய்தார்கள். மிகச்சிறந்த இந்த போராட்டம் ஒரு அமைப்பின் கீழ் நடந்திருந்தால் போராட்டத்தின் இறுதி நாளில் நடைபெற்ற வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கும். ஒரு பெண் காவலரே கர்ப்பிணி பெண்ணை தாக்கி உயிரிழக்க செய்த சம்பவம் நிகழாமல் போயிருக்கும்.
இதன் பின்னணியில் உள்ள அரசியலை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக நூறு நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் கடைசி நாளன்று அரசாங்கத்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் உயிரிழந்தனர். எந்த போராட்டமுமே வெற்றிபெறக் கூடாது என்பதே அரசின் நோக்கம். இந்த மெரினா புரட்சி, மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்' என்று கூறி வாழ்த்தினார்.