சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2022 நவம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினாலும், விடுதலைக்குப் பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி முருகனின் மனைவி நளினி, மத்திய அரசுக்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த மனு மீது முடிவெடுக்க உத்தரவிடக் கோரி, நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கில், லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.