முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி அவரது கணவர் முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நளினி தனது மகள் ஹரிதாவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஆறு மாதங்கள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, எனது மகளுக்காக நான் ஒரு தாயாக இருந்து எதையும் செய்யவில்லை. மகளை சந்தித்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. 15 நாட்களுக்கு ஒரு முறை கூட கணவரை பார்க்க முடியவில்லை. அதனால் பரோல் வழங்க வேண்டும் என்று மிகவும் உருக்கமான தனது வாதங்களை நளினி முன்வைத்தார்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என்றும், விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக இருந்தால் ஒரு மாதம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, நளினியின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், உத்தரவாதம், முகவரி ஆகியவற்றை முறையாக சமர்ப்பித்தால் ஒரு மாதம் பரோல் வழங்கப்படுகிறது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், 10 நாட்களுக்குள் நளினியின் பரோல் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், செய்தியாளர்கள், அரசியல் தலைவர்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.