தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க சீமான் கோரிக்கை! - சீமான் செய்திகள்

சென்னை: தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து முதலமைச்சருக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

Naam tamilar party coordinator seeman
seeman letter to cm

By

Published : Oct 30, 2020, 7:51 PM IST

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

1956ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன.

தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழ்நாடு எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர்.

குமரித்தந்தை மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் மா.பொ.சிவஞானம் போன்றோரின் தொடர் போராட்டம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.

சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் 76 நாள்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார்.

பின்னர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா 18 சூலை 1968-இல் சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ எனப்பெயர் மாற்றினார்.

நீண்ட நெடிய காலமாக தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலப்பரப்பு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது.

தனக்கென மொழி இலக்கியம், பண்பாட்டு விழுமியங்கள் எனத் தனித்த அடையாளங்கள் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு, மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.

இந்திய ஒன்றிய அரசு 1956-இல் சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் இந்திய மத்திய அரசால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலப் பகுதியான வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாக திகழ்கிறது.

அத்தகைய பெரும் புகழ் கொண்ட, தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1ஆம் தேதியை 'தமிழ்நாடு நாளாக' அறிவிக்கும் அரசாணையைத் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பிறப்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், வரவேற்கத்தக்கதுமாகும்.

தமிழ்நாடு எனும் தமிழ்நாடு, தமிழகம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.

தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட திருநாளைப் போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும்.

உலகம் முழுக்கப் பரந்து வாழும் ஏறத்தாழ 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் தாய் நிலமாகத் திகழ்ந்துவரும் தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1ஆம் நாளை வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பிக்க வேண்டும் என்பது உலகமெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையாகும்.

இத்தோடு, தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து, தமிழர்களின் முன்னோர்களான மூவேந்தர்களின் கொடிகளைப் பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலகங்களிலும், அரசின் துறைசார்ந்த நிறுவனங்களிலும் ஏற்றி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி, அதனைப் பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடிட முன்னேற்பாடுகளைச் செய்திட வேண்டுமெனும் கோரிக்கையைக் கனிவோடு ஏற்று, அதனைச் செயலாக்கம் செய்திட முன்வர வேண்டுமெனத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details