தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்தூட் நிறுவனம் மீது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் - உயர் நீதிமன்றம் - தமிழ்நாடு அரசு

அரசின் திட்டங்களுக்கான தங்க காசுகள் விநியோகம் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Oct 19, 2021, 6:31 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, எட்டு கிராம்கள் எடையுடைய ஒரு லட்சத்து 11 ஆயிரம் தங்க காசுகளை வாங்குவதற்காக 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டது.

அதில், 22 காரட் தரத்திலான 20 ஆயிரம் காசுகளை வழங்குவதாகக்கூறி, முத்தூட் எக்சிம் நிறுவனம் டெண்டரில் பங்கேற்றது.

டெண்டர் திறக்கப்பட்ட பிறகு 20 நாட்கள் கழித்தே தேர்ச்சிக்கான கடிதம் கொடுக்கப்பட்டதாலும், தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்ததாலும், அதற்கேற்ப டெண்டர் தொகையை மாற்றிக்கொடுக்கும்படி முத்தூட் நிறுவனம் சமூக நலத்துறைக்கு கடிதம் எழுதியது.

கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட முத்தூட்

விலையில் மாற்றம் செய்யமுடியாவிட்டால் டெண்டர் நடைமுறையிலிருந்து விலகிக்கொள்ள அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததுடன், முத்தூட் செலுத்திய வைப்புத்தொகை 53 லட்சம் ரூபாயை முடக்கியதுடன், டெண்டர் விதிகளை மீறியதாகக் கூறி, அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்தும் சமூக நலத்துறை உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைகளை எதிர்த்து முத்தூட் எக்சிம் நிறுவனம் தொடர்ந்த வழக்கை, தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று (அக்.19) விசாரணைக்கு வந்தபோது, முத்தூட் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆனந்த், தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், டி.ரவிச்சந்தர் ஆகியோர் ஆஜரானார்கள்.

அரசுக்கு அதிகாரம் உண்டு

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பான விவகாரத்தில் நீதித்துறை ஆய்வு என்பது குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டது என சுட்டிக்காட்டியதுடன், எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில் மாற்று முறைகள் மூலம் தீர்வு காணாமல் நீதிமன்றத்தை நாடமுடியாது எனக்கூறி மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து சமூக நலத்துறை ஆணையர் அளித்த பரிந்துரைக்கு முத்தூட் நிறுவனம் விளக்கம் அளிக்காத நிலையில், அதன்மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details