தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ஆளுநர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்” - முத்தரசன் கண்டனம்! - ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு

CPI State Secretary Mutharasan condemned R.N.Ravi: ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆரம்ப நாளில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி முறைக்கு இடையூறு செய்து, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CPI State Secretary Mutharasan condemned R.N.Ravi
“ஆளுநர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்” - சிபிஐ இரா.முத்தரசன் கண்டனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 1:45 PM IST

சென்னை:இது தொடர்பாகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நேற்று (அக்.25) மதியம், ஆளுநர் மாளிகை முதன்மை நுழைவாயில் அருகில் சந்தேகப்படும் நிலையில் இருந்த கருக்கா வினோத் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளின் எச்சரிக்கை மிகுந்த நடவடிக்கையில் பிடிபட்ட குற்றவாளி, ஆளுநர் மாளிகை நுழைவாயில் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்து, குற்றவாளியை சம்பவ இடத்தில் கைது செய்துள்ளனர்.

காவல் நிலைய குற்றச் சரித்திரப் பட்டியலில் இடம் பெற்றுள்ள குற்றவாளி கருக்கா வினோத் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேசமயம் ஆளுநர் மாளிகை அதிகாரி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை வலிந்து திணித்திருப்பதை ஏற்க இயலாது.

அதனை வன்மையாக மறுக்கிறோம். ஆளுநர் மாளிகை அதிகாரியின் புகார் “திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக் கூட்டங்களிலும், அவர்களது சமூக ஊடகங்களிலும் அச்சுறுத்தப்படுவதாக” புகார் புனையப்பட்டுள்ளது.

ஆர்.என்.ரவி, ஆளுநர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆரம்ப நாளில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி முறைக்கு இடையூறு செய்து, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகள், மாநில அரசின் அதிகாரங்கள், சட்டமன்றப் பேரவையின் கடமைப் பொறுப்புகள், மாநில மக்களின் உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக ஆளுநர் பேசியும், செயல்பட்டும் வருவது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

விமர்சனங்களை உள்வாங்கி, குறைகளை போக்கிக் கொள்ளும் ஜனநாயகப் பண்புகளை மறந்த ஆளுநர், மலிவான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, காவல் துறையின் குற்றப் பதிவு சரித்திரப் பட்டியலில் இடம் பெற்று, கடுங்குற்றவாளிகளுக்கும், சட்டத்திற்கும் அடங்காத, ஊரறிந்த பிரபல ரவுடிகளுக்கும் அரசியல் தலைவர் தகுதி அளித்து வருவது குறித்து ஆளுநர் எந்த கட்டத்திலும் சிறுதும் கவலை தெரிவித்ததில்லை.

மாறாக, ஆன்லைன் சூதாட்டம் அறிவின் ஆற்றலை மேம்படுத்தும் என்று பேசி வந்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறந்துவிட மாட்டார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை விமர்சனம் செய்யும் உரிமையைப் பறிக்கும் வஞ்சக எண்ணத்துடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் மீது கூறப்பட்டுள்ள புகாரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்ஐஏ-க்கு மாற்ற வேண்டும்” - வானதி சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details