சென்னை: தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முத்தரசன், "ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்ற நாள் முதல், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தியாவில் இதுவரை எந்த ஒரு ஆளுநரும் மேற்கொள்ளாத நடவடிக்கையை, இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் மேற்கொண்டுள்ளார். வேண்டும் என்றே தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்திருக்கிறார்.
உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஆளுநருக்கு தனிப்பட்ட கட்சி கொள்கை இருப்பது தவறு இல்லை. அந்த கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று கருதினால், அவர் தன் பதவியை இழந்து என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆளுநர் தமிழ்நாடு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுநர் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு அரசு பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஆளுநர் இவ்வாறு செய்தது சரிதானா என ஒரு கட்சி சார்ந்த பிரச்னையாக கருதாமல், எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும். தேசிய கீதத்தைகூட மதிக்காத ஆளுநராக இருக்கிறார். ஆளுநர் பதவி தேவை இல்லை என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. உரையை படிக்க வேண்டியது, ஆளுநர் கடமை. உரையில் இருப்பதை படிக்காமலோ அல்லது சேர்த்து படிக்கவோ ஆளுநருக்கு எந்தவித உரிமையும் இல்லை" என கூறினார்.
இதையும் படிங்க:'ஆர்.என்.ரவி ஆளுநராக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ்.காரராக உள்ளார்' - கி.வீரமணி