தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் அவதிப்படும் இஸ்லாமியர்கள்; இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்!! - சென்னை மாவட்ட செய்தி

சென்னையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் இறந்த நிலையில் அவரது உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய இடம் தராததால் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 9, 2023, 8:06 PM IST

14 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் அவதிப்படும் இஸ்லாமியர்கள்

சென்னை: ஆவடி அடுத்த வெள்ளானூர் ஊராட்சி கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாத்திமா(55). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று இறந்து விட்டார். இவரது உடலை ஆவடி மாநகராட்சி கோயில் பதாகையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய இஸ்லாமிய மதத்தினர் கோரிக்கை வைத்தனர். அங்கு போதிய இடம் இல்லை எனக் கூறிவிட்டனர்.

இதைக்கேட்டு செய்வதறியாது திகைத்த அவரது உறவினர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் உடலைக் கொண்டு வந்து வெள்ளானூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆவடி, செங்குன்றம் சாலை செல்லும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் சுடுகாடு வசதி ஏற்பாடு செய்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கடந்த 14 வருடங்களாக கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் முறையாக இடுகாடு வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. சாலை மறியல் போராட்டத்தால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், மற்றும் வருவாய்த் துறையினர் இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கோயில் பதாகை இடத்தில் உள்ள சுடுகாட்டில், இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ”கொள்ளுமேடு கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமுல்லைவாயில் சிப்காட்டில் 25 ஏக்கர் இடத்தை காலியிடமாக அரசு கைப்பற்றியுள்ளது. அதில் 3 ஏக்கர் இவர்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமூக மக்கள் பயன்பெறும் வகையில் இடுகாடு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:"எடப்பாடியை திட்டாதீங்க" - ஸ்டாலினை பார்த்து கொந்தளிக்கும் அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details