சென்னை:உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (நவ.22) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சென்னை நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். மேலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள்,மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டனர்.
தமிழ் கற்கத் தொடங்கிய பண்டாரி
இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
இவர்களைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளதாகவும், தற்போதைக்கு "வணக்கம்" "நன்றி" என்ற இரண்டு வார்த்தைகளைத் தெரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.