சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த 43 ஆண்டுகளாக விஸ்வரூபம், நளதமயந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேவை எனவும்; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும்; மணிகண்டன் என்ற நபர் போலி விளம்பரத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ நாராயணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.
அதில், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை எனவும்; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரவி இருப்பதாகவும்; இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம் பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நடிக்க வேண்டும் என்றால் கூகுள் பே மூலமாகப் பணத்தை அனுப்ப வேண்டும் என மணிகண்டன் என்ற நபர் சமூக வலைதளத்தில் விளம்பரத்தை வெளியிட்டு, பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில நாட்கள் கழித்து நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் எனக் கூறி அவர்களிடமிருந்து தொடர் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி, இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட ஆகாஷ் என்ற நபர் 42 ஆயிரம் ரூபாய் ஏமாந்து இருப்பதாக, தனது பட நிறுவனத்தில் வந்து கேட்டபோது, தான் தங்களுக்கு இந்த மோசடி குறித்துத் தெரியவந்துள்ளதாக ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சிஇஓ புகாரில் தெரிவித்துள்ளார்.