சென்னை:இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனை 2014ஆம் ஆண்டு தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு பெறப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பலமுறை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. இதை நான் ஏற்கனவே அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன்
தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. உடனே, கேரள முதலமைச்சர் , அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது என்றும், அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும், மாநில விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி நீரை கேரளப் பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த முல்லைப் பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் 142 வரை நீரைத் தேக்காததற்கு ‘ரூல் கர்வ்’ என்ற விதி தான் காரணம் என்றும், இந்த விதியின் காரணமாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.