சென்னை: இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரும், பசுமை புரட்சிக்கு வித்திட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் (செப்.28) வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று (செப்.30) நண்பகல் அவரது உடல் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, காவல்துறை மரியாதையுடன் தரமணியில் இருந்து வாகனம் மூலமாக சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது.
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை:அதைத் தொடர்ந்து, பெசண்ட் நகர் மின்மயானத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக 10 காவலர்கள் தலா 3 முறை துப்பாக்கியால் வான் நோக்கி சுட, மொத்தம் 30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்கள் சௌமியா, மதுரா, நித்யாராவ் உள்ளிட்ட குடும்பத்தினர், கேரள அமைச்சர்கள் கிருஷ்ணன் குட்டி, பி.பிரசாத், தெலங்கானா அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷணன் ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.