சென்னை: குறுவை சாகுபடிக்கான ஆயத்தநிலை தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், துறை அலுவலர்களுடன் சிறப்பு ஆய்வு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அபபோது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஜீன் 12 ற்கு முன்னதாகவே மேட்டூர் அணை தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது.
எனவே, டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல்ல முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும். மேலும் விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை (C & D) மூலம் தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்திட வேண்டும்.
உற்பத்தி இலக்கு: குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நிலச்சமன்படுத்தும் கருவி மற்றும் நடவு இயந்திரங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், அவைகளை தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன், பிற மாவட்டங்களிலிருந்தும் வரைவழைத்து வழங்கிட வேண்டும்.
வட்டார அலுவலர்கள் அனைவரும் விவசாயிகளை நேரில் சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில் உரமிடுதலை ஊக்குவிக்க வேண்டும். மேலும், உழவர் சந்தைகளை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும். எப்பொழுதும் விவசாயிகள் மதிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குறுவை சாகுபடி: தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பினை பயன்ன்படுத்தி, அனைத்து அலுவலர்களும் இணைந்து குறுவைப் பருவத்திற்கான விதைகள், உரங்கள் மற்றும் கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகள் செவ்வனே செய்து உணவு தானிய உற்பத்திக்கு பாடுபட வேண்டும். இதனைத் தொடர்ந்து, “நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான குறுகிய கால நெல் ரகங்களான கோ 51, எடிடீ 45, எடிடீ 43, போன்றவற்றின் விதைகளை தேவையான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
வேளாண்மைத் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் 1,609 மெட்ரிக் டன் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 539 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் 1,111 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டும் வருகிறது. அதேபோல், தனியார் கடைகள் மூலம் 1,955 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டு 2,564 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றின் முளைப்புத்திறனை விதைச்சான்றளிப்பு துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கால்வாய் தூர்வாரும் பணிகள்: குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின் விற்பனையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறுவை பருவத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 66,000 ஏக்கர் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், உரிய விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கால்வாய் தூர்வாரும் பணிகளை நல்ல முறையில் செய்திட உரிய ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதோடு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இதுவரை இல்லாத அளவு கூடுதல் குறுவை சாகுபடி பரப்பு எய்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க:கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை ரூ. 10 குறைவு