தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஆர்பி செவிலியர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு! - MRB nurses fort siege protest announcement

எம்ஆர்பி செவிலியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என செவிலியர்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 8, 2023, 6:54 PM IST

எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் எம்ஆர்பி கோவிட் செவிலியர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் உதயகுமார் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'அனைத்து எம்ஆர்பி செவிலியர் சங்க மாநில நிர்வாகிகள் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், பல தகவல்கள் பேசப்பட்டது.

அந்த பேச்சு வார்த்தை எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டது போன்று இருந்தது. எங்களை காலை 11 மணிக்கு வர சொல்லிய அதிகாரிகள், மாலை 4 மணிக்கு மேல் தான் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வரவில்லை என்கின்றனர். எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. அதிகாரிகள் தரவுகளை மறைக்கப் பார்க்கின்றனர்.

இந்தப் பிரச்னை முதல் முறை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற தற்காலிக ஆரம்ப சுகாதாரப் பணிக்கு மாற்றுவதாக கூறப்பட்டபோது டிஎம்எஸ் வளாகத்தில் 2021 செப்டம்பரில் போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து இப்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்ட கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடந்தது. அப்போது நாங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை என்றனர்.

இதுகுறித்து ஆய்வு செய்ய அப்போதைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தோ்வாணையத்தின் தலைவர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 2400-க்கும் மேற்பட்டோர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று அறிக்கை சமர்ப்பித்தது.

அந்தக் குழு அளித்த அறிக்கை பொய் என்றால், அவர்கள் மீது விசாரணை கமிட்டி வையுங்கள். மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் 2020 மே 7ஆம் தேதி போடப்பட்ட உத்தரவில் கரோனா பெருந்தொற்று காலத்தில் 3 நாட்களுக்குள் செவிலியர் பணிக்கு வர வேண்டும் என்றும்; அதில் சேரவில்லை என்றால் இனி எந்த சேர்க்கையிலும் உங்கள் பெயர் சேர்க்கப்படாது என்றும் அரசாணை அளிக்கப்பட்டது. அப்போது எங்களை தேவைப்படும் போது மிரட்டி பணியில் சேர வைத்தனர். அதனால் தனியார் மருத்துவமனையில் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்த சிலர் கூட கரோனா காலத்தில் பணியாற்றினார்கள்.

இப்போது, நாங்கள் சொல்வது பொய்யா? அல்லது கமிட்டி சொல்வது பொய்யா?' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், 'எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் இட ஒதுக்கீடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்து விசாரணை செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். யார் மீது தவறு என்று விசாரிக்க வேண்டும். நாங்கள் இப்போதே நிரந்தர வேலையை கேட்கவில்லை. காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக பணி செய்ய அனுமதி கேட்கிறோம். தேசிய நல்வாழ்வுக் குழுமத்தில் ஏற்கனவே 14ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30 சதவீதம் உயர்த்தப்பட்டதால் 18ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலும், எங்களின் சொந்த ஊர்களில் பணி புரியலாம் எனக் கூறுகின்றார். கன்னியாகுமரியில் 500 பேர் இருக்கிறார்கள். அங்கு 50 அரசு மருத்துவமனைகள் இருந்தால், மற்றவர்கள் வேறு மாவட்டத்திற்குத்தான் செல்ல வேண்டும். காவல் துறை அனுமதி கொடுத்தால் சட்ட விதிக்கு உட்பட்டு அடுத்த கட்டமாக கோட்டையை முற்றுகையிடுவோம். அரசு அனுமதி அளிக்கவில்லை என்றாலும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் அனைத்து சங்கங்களுடன் இணைந்து முற்றுகையிடுவோம்” என்றார்.

இதையும் படிங்க:'ஜெயலலிதாவை கொன்றது மோடி தான்' - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

ABOUT THE AUTHOR

...view details