எம்ஆர்பி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பேரிடர் தொற்றுக் காலத்தில், சுமார் 6,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமான முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3,000 செவிலியர்களுக்குத் தற்காலிக செவிலியர் பணியிலிருந்து நிரந்தர தன்மையுடைய செவிலியர்களாகப் பணி மாற்றம் செய்யப்பட்டது.
மீதமுள்ள 3 ஆயிரத்து 290 தற்காலிக செவிலியர்களுக்கு, சுமார் 3 ஆயிரத்து 300 காலிப்பணியிடம் இருப்பதால் நிரந்தர தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசிடம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இந்த கோரிக்கையை ஏற்று அரசுத் தரப்பில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலும், இதற்கான அரசு கோப்புகளில் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஆனால், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவில் எவ்வித முன்னறிவிப்பின்றி, கரோனா காலத்தில் 3 ஆண்டு பணி செய்த தற்காலிக செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்தது.
மேலும், இதனை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அதன் விளைவாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அதேநேரத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகவும், ஆனால், எம்ஆர்பி தேர்வினை எழுதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட தங்களுக்கு அத்தகைய பணி ஏதும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஜூலை 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட எம்ஆர்பி கரோனா செவிலியர்கள் உரிய தேர்வு நடைமுறையைப் பின்பற்றியுள்ளனர் என்று கூறி, வழக்கு தொடுத்த செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
எனவே உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பணி வழங்க வேண்டும் என்றும், திமுக தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, நேற்று (செப்.25) முதல் செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து செவிலியர் சிவகாமி கூறும்போது, "கரோனா தொற்றின் பொழுது கர்ப்பிணிகள் முதற்கொண்டு பிபி கிட் அணிந்து தொடர்ந்து பணி செய்தனர். தற்பொழுது எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குழந்தைகளை வைத்துக் கொண்டு பாலூட்டும் தாய்மார்களும் கடும் சிரமத்திற்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். தற்போது வரை கர்ப்பிணிகள் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளனர். எனவே, தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்
மேலும், செவிலியர் உஷா கூறும்போது, "எம்ஆர்பி தேர்வில் தகுதி பெற்றிருந்த தங்களை 3 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும் என கூறினர். அதனைத் தொடர்ந்து மருத்துவத்துறை இணை இயக்குநர் குழுவினர் சான்றிதழ்களைச் சரிபார்த்தனர். அதன் பின்னர் பணியில் சேர்ந்து, பிற செவிலியர்களுக்கு இணையாகவே நாங்களும் பணிபுரிந்தோம். எங்களுக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், ஆவணங்கள் சரியில்லை என காரணம் கூறி பணியிலிருந்து நீக்கி விட்டனர். எனவே, நிரந்தரத் தன்மையுடைய செவிலியர் பணியினை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயங்கி விழுந்து சிகிச்சை பெறும் நிலையில், போராட்டம் தொடர்ந்தால் பல பெண்கள் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும் அவல நிலை ஏற்படும். இங்கு உள்ளவர்கள் அனைவரும் மயங்கி விழுந்து மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:"சிறிய படங்களை தடுப்பதும் ஒரு விதமான பாசிச மனப்பான்மை தான்" - இயக்குநர் போஸ் வெங்கட் சூசகம்!