சென்னை:எம்ஆர்பி கொரோனா நர்ஸ் அசோசியேசன் (MRB corona nurse association) துணைத் தலைவர் உதயகுமார் கூறும்போது, "கரோனா பேரிடர் தொற்றுக் காலத்தில் கடந்த 2020 ஆண்டு, சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிகமான முறையில் பணியமர்த்தப்பட்டனர்.
இதில் 3 ஆயிரம் செவிலியர்களுக்கு தற்காலிக செவிலியர் பணியில் இருந்து நிரந்தர தன்மையுடைய செவிலியர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டது. மேலும் 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 290 தற்காலிக செவிலியர்களுக்கு, சுமார் 3 ஆயிரத்து 300 காலிப்பணியிடம் இருப்பதால் நிரந்தர தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்யவேண்டும் என்று அரசிடம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கான அரசு கோப்புகளில் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அரசு அளித்த வாக்குறுதியை மீறி 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவில் எவ்வித முன்னறிவிப்பின்றி, தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 356க்கு எதிராகவும், 3 ஆண்டு பணி செய்த எங்களை பணிநீக்கம் செய்தது தமிழக அரசு" என கூறினார்.
மேலும் இதனை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அதன் விளைவாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அதே நேரத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.