சென்னை:கடந்த 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன திருத்தச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு அரசு கடந்த 19ஆம் தேதி இது தொடர்பாக அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை இன்று(அக்.26) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 300க்கும் மேற்பட்ட அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களில், 100 இயந்திரங்கள் அப்டேட் செய்யப்பட்டு, காவலர்கள் விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராதங்களை விதித்தனர்.
அதன்படி தாசபிரகாஷ் சிக்னல் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு ரூ.1000, சீட் பெல்ட் அணியாதவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். இதற்கான சலான் வாகன ஓட்டிகளிடம் வழங்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வாளர் பாண்டிவேலு,’’அனைத்து போக்குவரத்து ஜங்ஷன்களிலும் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஆய்வாளர் தலைமையில் உள்ள போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக ஹெல்மெட் அணிகிறார்களா? அதேபோன்று சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா? என்பதைக் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.