அன்னை:
உலகில் ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததாகவே இருக்கும். ஆனால், சிலவற்றில் மட்டும் நாம் அதை எப்பொழுதும் நினைக்கக்கூட முடியாது. அந்த வரிசையில் அன்னைக்கு ஈடாக மற்றொரு நபரை நாம் பார்க்கக்கூட மட்டுமல்ல; நம்மால் நினைக்கக்கூட முடியாது. அந்தளவிற்குத் தனது வாழ்வை தங்களது குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் வாழும் அன்னையின் மகத்துவத்தை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதுவும் மூத்தக் குழந்தையாகப் பிறந்தால், அந்தக் குழந்தைதான் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டாவது தாயாகவே இருப்பாள். இப்படி ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே பல்வேறு பொறுப்புகளுக்கு உரியவளாகவே இம்மண்ணில் பிறக்கிறாள். ஒரு பெண் குழந்தை பருவத்தில் தனது தாயின் அரவணைப்பிலும், பள்ளி பருவத்தில் தந்தையின் அரவணைப்பிலும் வளர்ந்து தனது வீட்டில் மகாராணியாகவே ஆட்சி செய்கிறாள். இப்படி தான் பிறந்த இல்லத்தில் செல்லத்திற்கே உரியவளாக வளர்ந்தவள், திருமணத்திற்குப் பின்பு தனது சொந்தங்கள் அனைத்தையும் பிரிந்து புகுந்து இல்லத்திற்குள் நுழைகிறாள்.
அப்போது அதுவரை அவள் தன்னிடம் இருந்த குறும்பையும், பிடிவாதத்தனத்தையும் முழுமையாகவிட்டு, மற்றவர்களுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து வாழத் தொடங்குகிறாள். வீட்டில் உள்ளவர்களை கவனித்து, இல்லத்தையும் கவனித்து முழு இல்லத்தரசியாகவே மாறிவிடுகிறாள்.
இப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தனது வாழ்வில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண், வாழ்க்கையின் மிகப்பெரிய வரமாக நினைக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதுவரை பெண்ணாக இருந்தால், இதற்கடுத்து தாய் என்னும் பேரின்பத்தை அடைவதற்காகக் கடவுளிடம் அவள் அனுதினமும் வேண்டுவாள். அதுவரை மகளாக, மனைவியாக இருந்தவள் தாய்மை என்னும் மிக உயரிய இடத்தைப் பெறுகிறாள்.
தாய்மை:
இதன் மகத்துவத்தை ஒவ்வொரு பெண்ணும் உணரும் தருணத்தில் அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய நற்பேறாகும். ஒரு குழந்தை பிறப்பதற்கு பத்து மாதம் என்பார்கள். அந்த பத்து மாதமும் ஒரு பெண் ஒவ்வொரு கட்டத்திலும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை எண்ணி எண்ணி தனக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும் சுகங்களாக நினைத்து ரசிப்பாள். இப்படி அணுஅணுவாக ரசித்து தனது குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கு மறுஜென்மம் எடுக்கிறாள். இப்படி தனது உயிரையே பணயம் வைப்பது தாய்மை என்ற ஒரே ஒரு வார்த்தைக்காகத்தான்.
இப்படித் தவமிருந்து பெற்ற குழந்தைகள் விளையாட்டுக்காகக்கூட அழுதாலும் பதறிவிடுவாள். குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிட்டு அதில் தன் பசியை மறந்துபோவாள். குழந்தைக்காக அவள் எதுவும் செய்வாள். தான் எந்தவொரு கஷ்டத்தை அனுபவித்தாலும் சரி தன் குழந்தைகளுக்கு சிறு துன்பம்கூட நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்டிருப்பவள். தன் குழந்தைகளுக்கு உண்ணும் உணவு, உடுத்தும் உடை, படிக்கும் படிப்பு என ஒவ்வொன்றிலும் சிறந்ததையே தர வேண்டும் என்பதற்காக அவளுடைய ஆசைகள், விருப்பங்கள் அனைத்தையும் மறப்பவள்.
அப்படி தனது குழந்தைகளை படிக்கவைத்து, நல்லதொரு வேலைக்குச் சென்று, மணமுடித்து வைத்து என அனைத்திலும் தனது கடமையைச் செவ்வனே செய்பவள். இப்படி தன் வாழ்நாளை தனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து கடைசி நாள்களில் குழந்தைகளின் அரவணைப்பில் வாழ குழந்தையாக ஏங்குபவள்.
இப்படி நம்மை வளர்த்து, படிக்கவைத்து, மணம் முடித்துவைத்து என வாழ்நாள் கடமையை அழகுறச் செய்து, நம்மையே நினைத்து நமக்காக இன்னும் காத்திருக்கும் அன்னையை நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வைத்துள்ளோமா என்றால் நம்மில் பலரிடம் பதில் இல்லை. நம் பக்கத்தில் வைத்து அன்பைக் காட்டி பார்த்துக்கொள்ள வேண்டிய அன்னையை முதியோர் இல்லத்திலும், அநாதையாகவும் பலர் சுமையாக நினைத்து விட்டுவிடுகிறார்கள்.
மறந்துவிடாதீர்கள், இதே நிலைமைதான் நாளைக்கு நமக்கும் வரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களைச் சீராட்டி பாராட்டி வளர்த்த அன்னையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டாம், ஆனால் உங்களது வீட்டில் வைத்தாவது பார்த்துக்கொள்ளலாமே. அன்னையர் தினத்தை உலகிற்காக கொண்டாடாதீர்கள். உங்களின் அன்னைக்காகக் கொண்டாடுங்கள்.
அன்னை கடவுளின் மறு உருவம். இனிமேலாவது அவர்களை எள்ளி நகையாடி தூக்கி எறியாமல், அவர்களின் மகத்துவத்தை உணர்ந்து வாழுங்கள். குழந்தையிலிருந்து பாட்டி என்ற நிலையை அடையும்வரை ஒரு பெண் தியாகத்தின் தீபமாய் ஒளிர்கிறாள். அந்தத் தீபச் சுடர் காற்றில் அணைந்துவிடாமல் இன்றும் கண் இமைபோல் காத்துவரும் நல்ல உள்ளங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். உலகில் வாழும் அன்னையர்கள் அனைவருக்கும் நமது ஈடிவி பாரத்தின் அன்னையர் தின வாழ்த்துகள்!