சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 15 மண்டலங்கள் உள்ளன. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி, அரசுப் பள்ளி, ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி என வடக்கு வட்டாரத்தில் 125 பள்ளிகளும், (மண்டலம் 2 தவிர) தெற்கு வட்டாரத்தில் 69 பள்ளிகளும், மத்திய வட்டாரத்தில் 164 பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளும் உள்ளன.
இதில் காலை உணவுத் திட்டங்கள் அனைத்தும், தற்போது அம்மா உணவகங்களில் மகளிர் சுய உதவிக் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்காலை உணவு திட்டத்தின் உணவுகளை தயார் செய்ய தனியாரிடம் ஓப்பந்தம் கோர சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கண்காணிப்புக் குழு: நாளொன்றுக்கு ஒரு மாணவனுக்கு காலை உணவுத் திட்டத்தில், 12 ரூபாய் 71 காசுகள் நிர்ணயிக்கப்பட்ட உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் பயிலும் 65 ஆயிரத்து 30 பள்ளி மாணவர்களுக்கு என்று கணக்கீட்டு 19 கோடியே 1 லட்சத்து 2 ஆயிரத்து 199 ரூபாய் என ஒரு வருடத்திற்கு (230 வேலை நாட்களுக்கு) தனியாருக்கு மாநகராட்சி கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இவர்களின் பணிகளை கண்காணிக்க துணை ஆணையாளர் தலைமையில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் என 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
தனியாருக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்: தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் தான் உணவுகள் வழங்கப்பட வேண்டும். மேலும் காலை 8 மணிக்கு உணவானது வழங்கப்பட வேண்டும்.
* உணவுகளை தயாரிக்கும் ஒவ்வொரு நாட்களுக்கு முன்பும் அக்குழுவின் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
* சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட்டால் அப்போதும் காலை உணவை வழங்க வேண்டும்.