சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமை அலுவலகத்தில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் கடந்த மே 5ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வரையில் 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில் "கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:'கலாச்சாரத்தை மேம்படுத்த 6,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்”- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்
தொடர்ந்து, "மாவட்டம் தோறும் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதால், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, நேற்று (ஆகஸ்ட் 04) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, மாநாட்டுக் குழு உறுப்பினர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்" என்றும் குறிப்பிட்ப்பட்டு உள்ளது.
மேலும் "புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்று உள்ள உடன் பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கட்சி அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இடம்பெறும் தஞ்சாவூரில் சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி!