சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுயமாக டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவத் தேவைக்கான பரிந்துரைகளை வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
முதல் கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்' தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.