தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐம்பது ஆண்டுகளில் 1000 நீர்நிலைகள் அழிப்பு: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!

சென்னை: ஆக்கிரமிப்பு, முறையான பராமரிப்பு இல்லாமால், பராமரிப்பதில் அலட்சியம் போன்ற காரணங்களால், 1000 க்கும் மேற்பட்ட நீர் நிலைகளி பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்களின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு...

1000-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் அழிவு
1000-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் அழிவு

By

Published : Feb 16, 2021, 10:34 PM IST

Updated : Feb 17, 2021, 8:35 AM IST

சென்னை:கடந்த 50 வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தமிழ்நாடு இழந்துள்ளது என முன்னாள் பொதுப்பணித் துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் ஆக்கிரமிப்பு, நீர் நிலைகளை பராமரிப்பதில் அலட்சியம், நிறைய ஏரிகள் விலை நிலங்களாக மாற்றப்பட்டது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 202 ஏரிகள், குளங்கள் இருந்ததாகவும், இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. மற்ற ஏரிகள் குளங்கள் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக பராமரிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் நிலைகள் விவசாய நிலங்களாகவும், வீட்டு மனைகளாக மாறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

1000-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் அழிவு

இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் மொத்த நீரின் இருப்பளவு ஓராண்டிற்கு 390 டிஎம்சி-யாக இருந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது 250 டிஎம்சி-யாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், “இந்த மாற்றத்தினால் அடிக்கடி குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. விவசாயிகள் போதுமான நீர் பாசன வசதியின்றி, வருமானமின்றி தவிக்கின்றனர். தமிழ்நாடு அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திர பிரதேசத்திடம் குடிநீர் மற்றும் பாசன நீருக்காக போராட வேண்டியிருக்கிறது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

பருவமழை காலங்களில், கன மழை ஏற்படும் போதும், நீரைத்தேக்க போதுமான வசதியின்றி, ஏறக்குறைய 20 முதல் 25 டிஎம்சி வரையிலான நீர் கடலில் கலக்கிறது என்று குறிப்பிட்ட அலுவலர்கள், சென்னை அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலுள்ள முக்கிய குடிநீர் வழங்கல் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, வீராணம், மதுராந்தகம், புழல் ஏரிகளில் முறையான தூர்வாரும் பணிகளை அரசு முன்எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த ஆய்வில் முழுமையாக ஈடுபட்ட சென்னையின் முன்னாள் சிறப்பு முதன்மை பொதுப்பணி துறை அலுவலர் அ.வீரப்பன் கூறுகையில், “சென்னையின் குடிநீர் வழங்கல் ஏரிகள் அனைத்தையும் நல்ல முறையில் தூர் வார வேண்டும். இதன் மூலம் நீரை அதிகளவில் தேக்கி வைக்க முடியும். மேலும், குடிநீர் பஞ்சமும் இருக்காது.

பொதுப்பணி துறை அலுவலர் அ.வீரப்பன்

முற்காலத்தில் காலத்தில் எப்படி நீர் நிலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டதோ, அதே நிலையை இப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றியங்களும், ஏரிகள் மற்றும் குளங்களை நல்ல முறையில் பராமரித்து அதிக அளவு தண்ணீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். மேலும், மாநில அரசும் இந்த பணிக்கான போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி, தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி நீலமேகம், கூறுகையில், "நீர் நிலைகளை பாதுகாக்க மக்கள், மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வார வேண்டும். அப்போது தான், உபரி நீரை தேக்கி வைத்து, தண்ணீர் தட்டுப்பாடு வரும் போது தேவைக்கேற்ப உபயோகித்து கொள்ளலாம்," எனத் தெரிவித்தார்.

இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டி, அரசு குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல ஏரிகள், கண்மாய்களில், மழை நீரை சேமிக்கும் வகையில் தூர் வாரப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன" என்றார். மேலும், பொதுப்பணித் துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து ஏரிகளையும் கண்காணித்து வருகிறது எனத் திட்டவட்டமாக கூறினார்.

இதையும் படிங்க:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள்!

Last Updated : Feb 17, 2021, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details