சென்னை:தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வந்தது. இதனையடுத்து டிச.5 அன்று வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது. இது வலுவடைந்து இரண்டு நாள்களுக்கு முன் புயலாக உருப்பெற்றது. இதனையடுத்து இதற்கு "மாண்டஸ்" எனப் பெயரிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று (டிச.9) இரவு முதல் சென்னையில் பலத்த காற்று வீசியது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் புயல் இன்று (டிச.10) அதிகாலை 3 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. மேலும் புயல் வலுவிழந்து குறைந்தபட்ச காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியது.
புயல் கரையைக் கடந்து உள்ளதால் தற்போது பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மாண்டஸ் புயலால் பெரும் சேதம் அடைந்துள்ளது. சென்னையில் 70 கி.மீ முதல் 80 கி. மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், பல மரங்கள் சாய்ந்தன.
காசிமேட்டில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. புயலால் சேதமடைந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.