தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூகநீதியா? சனாதனமா? - ‘திருவள்ளுவர் தினம்’ வாழ்த்தில் கருத்து மோதல்.. டெல்லி என்ன சொல்கிறது? - சமத்துவம்

Thiruvalluvar day: திருவள்ளுவர் தினமான இன்று, சமூகநீதி என முதலமைச்சர் ஸ்டாலினும், சனாதன பாரம்பரியம் என ஆளுநர் ரவியும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 12:44 PM IST

Updated : Jan 16, 2024, 12:53 PM IST

சென்னை:தமிழர் திருநாளாம் தைத்திருநாள், தமிழ்நாடு முழுவதும் தை முதல் நாள் ‘தைத்திருநாள்’, ‘தைப்பொங்கல்’ என கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த தினமான தை இரண்டாம் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ மற்றும் ‘திருவள்ளுவர் தினம்’ என கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 3வது நாள் காணும் பொங்கல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேநேரம், மார்கழி மாத கடைசி நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இன்று மாட்டுப் பொங்கல் தினம் தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி மற்றும் மரியாதை செலுத்தும் விதமாக, மாட்டுப் பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது. அதேநேரம், இன்று திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த 1971ஆம் ஆண்டு முதல் தை 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் தின வரலாறு: நாம் பள்ளிக் காலங்களில் இருந்தே மனப்பாட பகுதியாக படித்து வரும் திருக்குறள், பல வாழ்க்கை நெறிகளைக் கொண்டதாக விளங்குகிறது. இதில் உள்ள 1,330 குறள்களும் சிறந்த அறத்தை வழங்குகின்றன. இதனாலேயே தமிழறிஞர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் திருக்குறளை தங்களது பேச்சில் மேற்கோள் காட்டுகின்றனர். இந்த நிலையில், திருவள்ளுவர் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: அந்த வகையில், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள X வலைத்தளப் பதிவில், “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூறும் வகையில், இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா: அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள X பதிவில், “திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள். விவேகம் நிறைந்த கவிஞர் மற்றும் தத்துவஞானியான திருவள்ளுவர், மரபு மற்றும் மனித வாழ்வில் தெய்வீகத்தை தூண்டுவதோடு, பல யுகங்களுக்கு நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் தூண்டுகிறார். திருவள்ளுவர் அவர்கள் எழுதிய திருக்குறள் உலக நலனுக்கானது. இன்றைய பாரதத்தின் கலாச்சார ஞானத்தின் சான்றாகவும் இது கருதப்படுகிறது. திருக்குறள் நமக்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது X வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அதேநேரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி, குறள் வழியே நம் நெறி” என கூறியுள்ளார்.

முன்னதாக, திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து புகைப்படம் வெளியான விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ‘சமூக நீதி’ எனக் குறிப்பிட்டு, குமரி முனையில் இருக்கும் கருங்கல்லால் ஆன வள்ளுவர் சிலை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதேநேரம், ‘சனாதன பாரம்பரியம்’ எனக் குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடை, நெற்றியில் திருநீறு, ருத்ராட்சம் ஆகியவற்றுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எனவே, தற்போது திருவள்ளுவர் அடையாள விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அண்ணாமலை: இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு, தனது வள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட X பதிவில், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், பிரதமர் மோடி அறம் சார்ந்த சொற்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளது, மத்திய அமைச்சர் அமித்ஷா ‘சமத்துவ சமுதாயம்’ என குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விமானங்கள் ரத்தா? தாமதமா? நிறுவனங்களுக்கு டிஜிசிஏ கட்டுப்பாடு! புதிய விதிமுறை கூறுவது என்ன?

Last Updated : Jan 16, 2024, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details