சென்னை:ஒடிசா மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதிக் கொண்டதில் சுமார் 15க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 238 எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் மீட்புக்குழு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மேலும், இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்த காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் மீட்புப்பணி நிகழும் இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு, அரசு விழாக்களையும் அவர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று (ஜூன் 3) விமரிசையாக கொண்டாடவிருந்தது. ஆனால், அந்த விழாக்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ரயில் விபத்தின் காரணமாக இன்று நடைபெற இருந்த அனைத்து அரசியல் நிகழ்ச்சியும் ஒரு நாள் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.