சென்னை:தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில். இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு, (MK Stalin letter to PM Modi) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்தும், அதனால் நூல் மற்றும் ஜவுளி விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில், 'குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினை கொண்டுவர உதவிடும் பொருட்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நெருக்கடியில் நூற்பாலைத் துறைகள்: தமிழ்நாட்டில் நூற்பாலைத் தொழிலில் 15 லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு 1,500 நூற்பாலைகள் இயங்கி வருகிறது. இவை தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு, பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு, வங்கி வட்டி உள்ளிட்ட செயல்பாட்டுச் செலவு அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில், தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை நூற்பாலை சங்கம், ஜூலை 15, 2023 முதல் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு, இத்துறையை ஒரு கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
கூடுதல் சுமையான அவசரகால கடன்:கரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் ஒன்றிய அரசு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் (Emergency Credit Line Guarantee Scheme) குறுகிய கால கடன்களை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளதால், நூற்பாலைகளுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதோடு, உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்படும் 11 விழுக்காடு இறக்குமதி வரி, இந்தியாவிற்கும், சர்வதேச அளவிலான போட்டியாளர்களுக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க விலை வேறுபாடாக இருக்கிறது.