சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.12) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.561 கோடியே 26 லட்சம் செலவிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.201 கோடி மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 35 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், ஒரு பூங்கா மறுசீரமைக்கும் பணி, 5 புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கும் பணிகள், 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டும் பணிகள் ஆகிய முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்ட திட்டங்கள்:
- கொடுங்கையூரில் 170 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட தொடர் தொகுதி உலை முறையில் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்
- அம்பத்தூர் மண்டலம், வார்டு - 89 மற்றும் வார்டு - 92-ல் முகப்பேர் சாலையில் பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாததால் புதிய பாதாள சாக்கடைத் திட்டம் அமைத்திடும் வகையில் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி
- அம்பத்தூர் மண்டலம், வார்டு-93-ல் பாடிக்குப்பம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் உந்துநிலையம் அமைத்தல் மற்றும் கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணி
- நெசப்பாக்கத்தில் 74 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட தொடர் தொகுதி முறை புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்
- சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில், கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர் நகர் கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள்
- வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ், 51 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில், வள்ளியம்மை நகர் மற்றும் என்.டி.பட்டேல் ரோடு ஆகியப் பகுதிகளுக்கான கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் விசைக்குழாய்கள் மற்றும் கழிவுநீர் இறைக்கும் நிலையம் அமைக்கும் திட்டம்
- சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் 73 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் 561 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவிலான சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 14 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.