சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று (நவ.2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக கொளத்தூர், திருச்செங்கோடு, தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Com, BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் கல்லூரி தொடங்கிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை
நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில், அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்கிட உத்தேசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடப்புக் கல்வியாண்டிலேயே மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு அக்டோபர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதுவரை 193 மாணவ, மாணவியர்கள் சேர்க்கை முடிக்கப்பட்டுள்ளது.