தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதவராவ் மறைவு: தலைவர்கள் இரங்கல் - திமுக தலைவர் ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவராவ் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MK Stalin, puducherry former cm, Sanjay Dutt mourns congress candidate Madhavrao death
MK Stalin, puducherry former cm, Sanjay Dutt mourns congress candidate Madhavrao death

By

Published : Apr 11, 2021, 1:41 PM IST

சென்னை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினராக தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்க வேண்டியவர். அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் ட்வீட்

காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரோனா தொற்று காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து வேதனையுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துக்கத்தின் இந்த நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், அவருடைய ஆன்மா நிம்மதி அடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி ட்வீட்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரோனா தொற்று காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து வேதனையுற்றேன்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details