சென்னை:சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் 9 நாட்களாக அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் 3233 கோடி மதிப்பீட்டிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்னை திரும்பினார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் மேற்கொண்டு வந்த 9 நாள் அரசு முறை பயணத்தை நிறைவு செய்து தமிழகம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
அவரை வரவேற்பதற்காகச் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகர மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் “தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும் தொழில்துறை ரீதியாகவும் நல்லுறவைப் பெறக்கூடிய வகையில் இந்த பயணம் அமைந்தது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டம் என்றால் மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவை இன்று செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என் என்றால் அதற்கு ஜப்பானுடைய பங்கு இருக்கிறது” என தெரிவித்தார். உற்பத்தித் துறையில் முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு. அதேபோல் ஆசியாவிலேயே உற்பத்தி தொழில் மையமாகத் தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும்.
அதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசின் குறிக்கோள். இதற்காகத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஏற்கனவே இதற்காக ஜப்பான் சென்று ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். குறைந்தபட்சமாக 3000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என திட்டமிட்டுச் செயல்பட்டோம்.
அதன் வகையில் முந்தைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும், தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டு ஜப்பான் நாட்டில் இருக்கக்கூடிய பல தொழில் நிறுவனங்களிடம் பேசி அதில் முக்கிய திட்டமான 1891 கோடி ரூபாயில் குளிர்சாதன தயாரிக்கும் புதிய தொழிற்சாலை நிறுவனங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே சென்னையில் என் கண் முன்னால் கையெழுத்துப் போடப்பட்டது.
அதனையொட்டி ஐபி நிறுவனம் முனிரெத் ரூபாய் 312 கோடி, டைசன் நிறுவனம் ரூபாய் 83 கோடி, டீயூ ஹோண்டா ரூபாய் 113.9 கோடி. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களிடம் மொத்தமாகச் சேர்த்து 3233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பதனை உங்களிடம் மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறேன்.
சிறுகுரு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்கும் தொழில் கல்வி வளர்ச்சிக்கும் உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பல முன்னணி நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அடுத்து தொழில் கட்ட நிகழ்ச்சி மேம்பாட்டிற்கும் இந்த தொழிற்சாலைகள் தூண்டுகோலாக இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
அதே போல் சிங்கப்பூரிலும் ஜப்பான், டோக்கியோ நகரிலும் இருக்கக்கூடிய பல முன்னணி நிறுவனங்களுடன் தலைவர்களைச் சந்தித்தேன். அதே போல் சிங்கப்பூர் நாட்டில் இருக்கக்கூடிய சட்டம், உள்துறை, தொழில் வர்த்தகத்துறை அமைச்சர்களையும் சந்தித்து தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் திட்டங்களைக் குறித்தும் இந்தியாவில் தொழில் துறையை தொடங்குவதற்குத் தமிழ்நாடு உகந்த மாநிலமாக இருக்கும் என எடுத்துரைத்தோம்.