சென்னை: திமுக தோற்றம் கண்டு 74 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளதை கொண்டாடும் விதமாக வேலூரில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி மக்களின் பெரு ஆதரவுடன் கொண்டாட இருக்கிறது. இந்த பொது கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அறிக்கையில் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், "திராவிட முன்னேற்ற கழகம் தனது 75-ஆம் ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. ஒரு மாநிலக் கட்சி முக்கால் நூற்றாண்டு காலம் தன் மக்களின் நலன் காக்க உறுதியாகப் போராடியும், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியும், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்களை வகுத்தும், சட்டங்களை உருவாக்கியும் இன்று இந்தியாவை வழிநடத்தக்கூடிய வகையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றும் திகழ்கிறது என்றால் அந்தப் பெருமை நம் உயிராகவும், உதிரமாகவும் திகழ்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உரியது. இந்த வரலாற்றுப் பெருமையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் அளப்பரியது.
உங்களில் ஒருவனான நான் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களால் வரவேற்கப்பட்டேன். ஜனநாயக விரோத - மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்று இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவாக்கியபோது ஏளனம் பேசினார்கள். 'இது ஃபோட்டோ செஷன்' என்று நகையாடினார் ஒன்றிய உள்துறை அமைச்சர்.
நகையாடியவர்களின் கண்களில் பயமாடுவதை பெங்களூரு நகரில் நடந்த 'இந்தியா' கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காண முடிந்தது. அதன் பிறகு, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பை மாநகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், அதில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்டபோது, பா.ஜ.க அரசின் பயத்தின் விளைவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலைக் குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது.
10 ஆண்டு காலமாக இந்தியாவை மதத்தின் பெயரால் பாழ்படுத்தி, கடும் விலையேற்றத்தால் மக்களை வதைத்து, அவரவர் தாய்மொழியையும் மாநில உரிமைகளையும் நசுக்கி, பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு உணர்வுகளை ஒடுக்கி, ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் - ஒரே உணவு என்ற சர்வாதிகார தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பவை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிற வாக்காளர்களும்தான்.
இந்த ஒற்றுமை உணர்வை ஒருமுகப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, இந்திய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கான வழி என்பதால், அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுத் தங்கள் பணியை மேற்கொள்கின்றனர்.
இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்கமாகத் திகழ்கிறது தி.மு.க எனும் பேரியக்கம். தனது பவள விழாவைக் கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், சமூகநீதி - மாநில உரிமை - பன்முகத்தன்மை கொண்ட வகையில் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது என்றால், இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.
தந்தை பெரியாரின் இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சென்று, ஜனநாயக முறையில் அவற்றை நடைமுறைப்படுத்தத் தனி இயக்கம் கண்டவர் பேரறிஞர் அண்ணா. அந்த இலட்சியங்களை நிறைவேற்ற அண்ணாவுக்குத் துணையாகவும், அண்ணாவுக்குப் பிறகு கழகத்தின் தலைவராகவும் இருந்து நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். அவர்களின் தொடர்ச்சியாக, உடன்பிறப்புகளாம் உங்களின் பேராதரவுடன் கழகத்தின் பயணம் உங்களில் ஒருவனான என் தலைமையில் தொடர்கிறது.