சென்னை:அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எதிர் அணிகள் அனைத்தும் இனைந்து ஓரணியாகத் திரண்டுள்ளது. இந்த கூட்டணிக்கு 'இந்தியா' எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் இரண்டு கூட்டங்கள் ஏற்கனவே பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கூட்டம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறவிருக்கிறது.
மும்பையில் நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்:இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 11 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால் இன்றும், நாளையும் நடைபெறக்கூடிய 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி குறித்தும், மற்ற எதிர்க்கட்சிகளை எவ்வாறு இணைப்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருந்தாலும் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும், கூட்டணியின் "லோகோ" வும் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் மும்பைக்குப் படையெடுத்துள்ளதால் அரசியல் பார்வையாளர்களின் பார்வை "இந்தியா" கூட்டணியின் பக்கம் திரும்பியுள்ளது.மேலும் கூட்டணிக்கு அமைப்பாளரை நியமிப்பது, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது என முக்கிய முடிவுகள் இந்த இரண்டு நாட்களில் எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து;தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினைப் பொருத்தவரை அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு அரசியல் தலைவராக "இந்தியா" கூட்டணியில் பார்க்கப்படுகிறார். மத்தியில் ஆளும் கட்சி மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையைத் தவிர வெற்றி பெற முடியவில்லை.
அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தி.மு.கவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வியூகமும் தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இந்த இந்தியா கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைக்கும் பணியில் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிய மு.க ஸ்டாலின்:இது ஒருபுறம் இருக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார் என்றே கூறலாம். இந்த கூட்டத்தில் பங்கேற்க மும்பை புறப்படுவதற்கு முன்பே "ஆரம்பிக்களாங்களா தெற்கிலிருந்து உங்களின் ஒருவன் பேசுகிறேன்" SPEAKING FOR INDIA _ என்ற காணொலியை வெளியிட்டுச் சென்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
அந்த காணொலியில், "இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் இந்தியாவை எந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர் , நாம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரக் காணொலியாகவே மு.க ஸ்டாலின் இந்த பேச்சு பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
"இந்தியா" கூட்டணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில்: இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகளுக்குள் சிறிய சிறிய குழப்பங்கள் இருக்கிறது எனவும், இன்றும் நாளையும் நடைபெறக்கூடிய கூட்டத்தில் இந்த பிரச்சனைகளைப் பேசி தீர்த்துக் கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பொருத்தவரை அவர் இந்த கூட்டத்தில் ஒரு பலமான அரசியல் தலைவராக பார்க்கப்படுகிறார் எனவும் அவருக்கும் இந்த கூட்டணியில் இருப்பது கூடுதல் பலத்தைத் தான் ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எந்த கூட்டணியில் இருக்கிறார் என்பது இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை எனக்கூறிய ரவீந்திரன் துரைசாமி, அவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை வந்துள்ளார் எனவும் ஒரு வேளை அவரை கூட்டணியில் இனைப்பதற்கான பேச்சு வார்த்தையில் சோனியா காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். அப்படி ஒரு வேளை மாயாவதி இந்தியா கூட்டணியில் இனைந்தால் இந்த கூட்டணிக்கு அது கூடுதல் பலமாக அமையும்" எனவும் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"ஒரு கிளிக்கில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000"- ராகுல் காந்தி பெருமிதம்!