தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக பேட்டி - MK stalin on tamil nadu caste census

MK stalin on tamil nadu caste census: தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடந்த 21ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். பீகார் அரசை போல மாநில அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசிடம் வலியுறுத்துவது ஏன்? என்ற கேள்விக்கு ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 4:19 PM IST

Updated : Oct 28, 2023, 6:52 PM IST

சென்னை: இந்தியாவில் கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்பானது 2011ல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக 2021ல் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பானது கரோனா பரவல் காரணத்தால் தடைப்பட்டது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பானது எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இப்படி இருக்கப் பீகார் மாநில அரசானது, மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் வரை சென்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளைக் கடந்த கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிட்டது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினால் மற்றும் சரியான இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க முடியும், சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், "இந்தியாவில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பை இணைத்து நடத்திட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்விவகாரத்தில், பீகார் மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசை வலியுறுத்துவது ஏன் என அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் கடிதம் எழுதி உள்ளீர்கள்.. ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதா? என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை மின்னஞ்சல் வாயிலாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு சமூகநீதி மண். இன்றைக்கு இந்தியாவில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண். சாதிவாரி கணக்கெடுப்பைப் பொறுத்தமட்டில், 'சென்ஸஸ்' என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் நிர்வாகப் பட்டியலில் இருக்கிறது. அதனால்தான் தி.மு.க.வும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 'சாதிவாரி கணக்கெடுப்பு' 2011-இல் துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பா.ஜ.க. அரசு அந்த கணக்கெடுப்பு முடிவை வெளியிடவில்லை.

அமைச்சரவையிலேயே 2015-இல் இதற்காக நிபுணர் குழு அமைத்தும் இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பின் அந்த நிபுணர் குழு அறிக்கையையும் வெளியிடவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் எப்படி 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை வாய்ப்பு - கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததோ அது போல ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதி வாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

குறிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி விரையில் வெளியாகும்

Last Updated : Oct 28, 2023, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details