கோயம்புத்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா, கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தொடர்ச்சியாக இவரை பணி செய்யவிடாமல் சிலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை சரிதா அளித்துள்ளார்.
அந்த புகாரில், நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமரவிடாமல் பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். ஊராட்சி எல்லையிலுள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் "ஊராட்சி தலைவர் சரிதா" என தனது பெயரை எழுதவிடாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோயம்புத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதோடு, கொலை மிரட்டலுக்கும் உள்ளாகிருக்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப் பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்”எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:’தலைவர்னு உன் பெயரை எழுதவிட மாட்டேன்’ - பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்!