தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - Rs 1000 pongal gift

Rs 1,000 in Pongal Gift: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 சேர்த்து வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 12:32 PM IST

Updated : Jan 5, 2024, 2:33 PM IST

சென்னை:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 பொங்கல் பண்டிகையையொட்டி, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வழக்கமான ரொக்கப்பணம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக உள்பட பல தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது வரும் 10ஆம் தேதியன்றே மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும் ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த ஜனவரி 2 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாக்கை துறுத்தியவாறு திமுக நிர்வாகியை கடிந்துகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி!

Last Updated : Jan 5, 2024, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details