சென்னை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, யா.கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் என்பவரது மனைவி ஆயி என்ற பூரணம், தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் பூரணம், சுமார் ரூ.7 கோடி ரூபாய் மதிப்புமிக்க அந்த இடத்தை, தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அவருக்கு சமூக வலைத்தளங்களிலும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில், இது குறித்து அறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆயி பூரணம் பணிபுரியும் வங்கிக்கு நேரில் சென்று, அவருக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயி என்ற பூரணத்தை பாராட்டி, அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X சமூக வலைத்தளப் பதிவில், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து, தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக கொடையாக அளித்துள்ளார், மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்.